search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிடர் மீட்பு குழு"

    கஜா புயலில் சாய்ந்த தேக்கு மரங்கள் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். #gajacyclone

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் அருகே உள்ள வெட்டாறு கரையில் வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரங்கள் உள்ளன. கடந்த மாதம் வீசிய கஜா புயல் தாக்கியபோது, தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருவாரூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் வெட்டாற்றங்கரையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புயலில் சாய்ந்த தேக்கு மரங்கள் கடத்தப்பட்டு மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்குள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்த மரங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

    இதுதொடர்பாக நீலக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த்துறை ஊழியர் பன்னீர்செல்வம், பல்கலைக்கழக காவலாளிகள் முருகேசன், சிவராமகிருஷ்ணன், பிளம்பர் தீனதயாளன், டிரைவர் கண்ணையன் ஆகிய 5 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இவர்கள் நன்னிலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரங்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் துணைவேந்தர் உத்தரவின்பேரில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துணை பதிவாளர் வேலுவிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அவரிடம் இருந்த 5 பொறுப்புகள் பறிக்கப்பட்டு உள்ளன.

    துணை பதிவாளர் வேலுவிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதன் பின்னணியில் பல்கலைக்கழகத்தில் உள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? தேக்கு மரங்கள் யாருக்கு விற்பனை செய்யப்பட இருந்தது? என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் மேலும் சிலர் சிக்கலாம் என்று தெரிகிறது.

    இதுபற்றி பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி கூறியதாவது:-

    தேக்கு மரங்கள் கடத்தல் விவகாரத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #gajacyclone

    முதல் அமைச்சரின் கஜா புயல் நிவாரணத்திற்காக 13 கோடி ரூபாய் திரண்டுள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. #Gaja #GajaRelief
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    “கஜா” புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகை வாயிலாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த வேண்டுகோளினை ஏற்று, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள், அரசியல் பிரமு கர்கள் பலர் நன்கொடை வழங்கினார்கள்.

    மேலும் பொதுமக்களும் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை கிடைத்த தொகை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாயாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ‘கஜா புயல் பாதிப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதித்து, மத்திய அரசிடம் போதிய நிவாரண தொகையை பெற வேண்டும்’ என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #anbumani #gajacyclone
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் 2 நாட்கள் சென்று பார்வையிட்டேன். வரலாறு காணாத வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் கொடைக்கானலிலும் சேதமடைந்து உள்ளது. பலநூறு கிராமங்களில் மீட்பு பணிக்காக ஒரு அதிகாரிகள் கூட செல்லவில்லை. மழையால் வீடுகளை இழந்து பொதுமக்கள் முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் கோவில்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

    மத்திய அரசு அளிக்கும் நிதியை பெற்ற பின்னர் தான் மீட்பு பணியில் ஈடுபடுவோம் என்ற மனநிலையில் மாநில அரசு இருக்க கூடாது. உடனடியாக மீட்பு பணியில் இறங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமரும், மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்ட எவரும் பார்வையிட வரவில்லை. மாறாக கேரளாவில் புயல் பாதித்த பகுதிகளில் உடனடியாக பிரதமர் வந்து பார்வையிட்டு ரூ.500 கோடி நிவாரணமும் அறிவித்தார்.

    எத்தனையோ புயல் வந்தும் மாநில அரசு பாடம் கற்பிக்கவில்லை என்றால் அதிகாரிகள் எதற்கு?, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் போன்றவை எதற்கு?. மீட்பு பணியும் நடக்கவில்லை, நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுக்கும் பணியும் நடக்கவில்லை. குடியிருப்புகளும் சேதமடைந்ததுடன், கால்நடைகள் இறந்ததுடன், 10 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்து உள்ளன. இதுதவிர நெல்பயிர், கரும்பு, வாழை மற்றும் முந்திரிதோப்பு போன்றவையும் பாதிக்கப்பட்டு உள்ளன.

    எனவே இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும், தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் உடனடி தேவைக்கு ரூ.50 ஆயிரம் போட வேண்டும். வேதாரண்யம் பகுதியில் உள்ள காடுகள் மற்றும் பறவைகள் சரணாலயமும் சேதமடைந்து உள்ளன.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் பொருட்களும், சேவையும் அளித்து வருகிறோம். இதுவரை ரூ.20 லட்சம் மதிப்பில் பொருட்களை வழங்கி உள்ளோம். மருத்துவ சேவையையும் அளித்து வருகிறோம். இதனை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அரசும் அதிகளவில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். வானிலை மாற்றங்களால் எதிர்காலத்தில் இதுபோன்று பல புயல்களை சந்திக்க இருக்கிறோம். மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததும் ஒரு குறையாகும். புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்பேன்.

    தமிழக அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, விவாதித்து, குழு ஒன்றை அமைத்து டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் பாதிப்புகளை கூறி உரிய நிவாரணத்தை பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.  #anbumani #gajacyclone
    கஜா புயல் நாளை நள்ளிரவே தமிழக கடலோர பகுதியை தாக்கும் என்றும் புயல் கரையைக் கடக்கும்போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    சென்னை:

    அந்தமான் அருகே கடந்த வாரம் தீபாவளிக்கு மறுநாள் அதாவது 7-ந்தேதி புதன்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

    கடந்த வாரம் இறுதியில் அது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது. முதலில் அதன் திசை ஒடிசா மாநிலத்தை நோக்கி இருந்தது.

    கடந்த சனிக்கிழமை அதன் திசை சென்னை நோக்கி திரும்பியது. பிறகு அது சென்னைக்கும் நாகைக்கும் இடையே வரும் வகையில் தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் நகர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை அது புயல் சின்னமாக மாறியது. இதையடுத்து அந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது. இது இலங்கை அளித்த பெயராகும்.

    நேற்று மதியம் கஜா புயல் சற்று வலுப்பெற்றது. ஆனால் புயலின் நகரும் திசை மேலும் தென் பகுதி நோக்கி திரும்பியது. இதனால் கஜா புயல் தாக்கும் அபாயத்தில் இருந்து சென்னை மற்றும் வடமாவட்டங்கள் தப்பின.

    நேற்று பிற்பகல் நிலவரப்படி கஜா புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வகையில் நகர்ந்தது. தற்போது அந்த புயல் தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. நேற்று கஜா புயல் மிக, மிக மெல்ல 5 கி.மீ. வேகத்தில்தான் நகர்ந்தது.


    இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கஜா புயல் நகர்வு வேகம் 7 கி.மீட்டராக அதிகரித்தது. ஆனால் 8.30 மணிக்குப் பிறகு 6 கி.மீ. வேகத்தில்தான் நகர்ந்து வருகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி கஜா புயல் சென்னையில் இருந்து கிழக்கே சுமார் 730 கி.மீ. தொலைவில் இருந்தது.

    நாகையில் இருந்து வடகிழக்கே சுமார் 820 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது.

    இன்னும் 24 மணி நேரத்தில் கஜா புயல் அதி தீவிர புயலாக மாறும் என்று அகில இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி கஜா புயல் இன்று அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் கஜா புயலின் நகரும் வேகம் இனி அதிகரிக்கும். இன்று காலை முதல் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புக் காணப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை)யும் கஜா புயல் அதி தீவிர புயலாக நீடிக்கும். நாளை பிற்பகல் கஜா புயல் தமிழக கடலோரத்தை நெருங்கும். எனவே நாளை காலை முதல் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். இயல்பான காற்று வீசும் என்று வானிலை இலாகா கூறி உள்ளது.

    இந்த நிலையில் கஜா புயல் நாளை (புதன்கிழமை) நள்ளிரவே தமிழக கடலோர பகுதியை தாக்கும் என்று தெரிய வந்துள்ளது. கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும். தமிழக கடலோரத்தை கஜா புயல் நெருங்கியதும் அதன் வேகம் அதி தீவிர நிலையில் இருந்து சாதாரண வலு குறைந்த புயலாக மாறி விடும்.

    என்றாலும் புயல் கரையைக் கடக்கும்போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். சில சமயம் காற்றின் வேகம் 100 கி.மீ. ஆகவும் இருக்கும். புயல் கரையை கடக்கும் போது வேகம் குறைவதால் அது நாளை நள்ளிரவு தொடங்கி வியாழக்கிழமை மதியம் வரை கரையைக் கடக்கும்.

    புயல் கரையைக் கடக்கும் போது 7 மாவட்டங்களிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும். சில பகுதிகளில் 20 முதல் 25 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலை இயல்பை விட ஒரு மீட்டர் உயரம் எழும்பும்.


    புயல் கரையைக் கடக்கும்போது கடலூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்யும். கடல் சீற்றம் மிக அதிகமாக இருக்கும். எனவே மீனவர்களும், கடலோரப் பகுதி மக்களும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர் - பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்போது திசை மாற்றம் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால் கஜா புயல் வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா உள்பட வெளிநாட்டு வானிலை ஆய்வு மையங்கள் கூறியுள்ளன. காற்றின் வேகம் மற்றும் திசையைப் பொறுத்து இதிலும் மாற்றம் வரலாம்.

    15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு புயல் கரையை கடந்த பிறகு புயலின் வேகம் குறைந்து விடும். தமிழ்நாட்டுக்குள் தரைப் பகுதிக்குள் வந்ததும் புயல் பலவீனம் அடையும். குறைந்த காற்றழுத்தமாக மாறி விடும்.

    அந்த நிலையில் அந்த குறைந்த காற்றழுத்தம் கேரளா வழியாக 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அரபிக் கடல் பகுதிக்குள் சென்று விடும். அன்றே அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கலைந்து விடும்.

    கஜா புயல் நாளை நள்ளிரவு முதல் நாளை மறுநாள் முற்பகல் வரை கரையை கடக்கும் போது பலத்த மழையும், அதிவேக சூறாவளி காற்றும் வீசும் என்பதால் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 3 மீட்புக் குழுக்கள் நாகை மாவட்டத்துக்கும், 2 குழுக்கள் சிதம்பரத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இது தவிர முதன்முறையாக தன்னார்வலர்களை உள்ளடக்கிய சிறப்புப் படைகள் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. 4400 இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் கூடுதல் அரசு ஊழியர்கள், மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இதற்கிடையே புயல்- மழை பாதிப்புப் பகுதிகளில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனே உதவிகள் செய்ய கடலோர காவல் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 8 கப்பல்கள் இதற்காக தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மூன்று கடலோர காவல் படை விமானங்களும் தயாராக உள்ளன.

    மொத்தத்தில் கஜா புயலை எதிர்கொள்ள 30,500 பேர் தயார் நிலையில் உள்ளனர். வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்க சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

    குடிநீர், உணவுப் பொருட்களும் கை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆவின் பால் வினியோகம் தங்கு தடையின்றி நடக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    மண் மூட்டைகளுடன் அரசு அதிகாரிகளும், மின் உபகரணங்களுடன் மின்சார வாரிய ஊழியர்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். எனவே கஜா புயல் எந்த சீற்றத்துடன் வந்தாலும் சமாளிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #GajaCyclone #Gaja #ADMK #TNMinister #RBUdhayakumar
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரில் ரூ. 7 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 32 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இன்று தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடலோர மாவட்டங்களில் கூடுதலாக பாதுகாப்புகளை ஏற்படுத்த அனைத்து கடலோர மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டு உள்ளது.

    பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் தங்குவதற்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

    4,399 இடங்கள் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேவைப்படும் பட்சத்தில் மத்திய பேரிடர் மீட்பு குழு பயன்படுத்தப்படும். 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    காற்றோடு மழை இருக்கும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. எனவே மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக செய்திகளை அவ்வப்போது கொண்டு சேர்ப்போம். ரெட் அலர்ட் என்பது அரசு நிர்வாகத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அச்சப்பட தேவையில்லை.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கடலோர மாவட்டங்களிலும் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே கடலுக்குள் சென்றவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Gaja #ADMK #TNMinister #RBUdhayakumar
    அரக்கோணத்திலிருந்து மதுரை, ஊட்டி, கோவை, குமரி போன்ற 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #TnRain #NDRF

    அரக்கோணம்:

    தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நாளை மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

    இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 200-க்கும் மேற்பட்டவர்களை மதுரை, ஊட்டி, கோவை, குமரி போன்ற 5 மாவட்டங்களுக்கு துனை கமான்டர் ராஜன்பாலு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து உதவி கமான்டர் கூறுகையில்:-

    இந்த குழுவினர் தங்களுடன் மரம் அகற்றும் கருவிகள் பைபர் படகுகள் நீச்சல் வீரர்களுக்கான உடைகள் என பல்வேறு கருவிகளுடன் எதற்கும் தயாராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இது தவிர கேரளாவிற்கும் 5 குழுக்கள் சென்றுள்ளனர். ஏற்கனவே திருச்சூரில் 3 குழுக்கள் உள்ளனர் எதற்கும் தயார் நிலையில் உள்ளோம் என்றார்.

    இதேபோல் அரக்கோணம் தாலுகாவில் பேரிடர் தாக்கும் பகுதிகள் என 8 கிராமங்களை ஆய்வு செய்து நேற்று மாலை தாசில்தார் பாபு கிராமத்துக்கு 10 பேர் வீதம் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மீட்பு பணிகளுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

    பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தயங்காமல் ஒன்றினைந்து செயல்பட்டால் பெரும் சேதம் தவிர்க்க உதவியாக இருக்கும். ஆகவே யார் வேண்டுமானாலும் எதிர்பாராமல் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. #TnRain #NDRF

    ×